பிரெஞ்சு அல்ப்ஸில் குழந்தைகளை வெட்டி வெறியாட்டம் புரிந்த சிரியா அகதி!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

தஞ்சம் கோரிய நிலையில் இளைஞர் புரிந்த கொடூரம் ஆறுபேர் ஆபத்தான நிலை.

கோழைத்தனமான தாக்குதல் அதிபர் மக்ரோன் கண்டனம்
பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் அன்னேசி ஏரிக் கரைப்பகுதியில் (Lake Annecy-Haute-Savoie) உள்ள பூங்கா ஒன்றில் குழந்தைகள் உட்படப் பலரைக் கத்தியால் கண்டபடி வெட்டித் தாக்கிய இளைஞர் ஒருவரைப் பொலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

 

அரைக் காற்சட்டை அணிந்த அவர் ஓரிரு நிமிட நேர இடைவெளியில் எதிர்ப்பட்ட அனைவரையும் கண்டபடி வெட்டித் தாக்கியுள்ளார். தாக்குதல் தொடங்கி நான்கு நிமிடங்களுக்குள் பொலீஸார் அங்கு விரைந்துவந்து தாக்குதலாளியை மடக்கிப் பிடித்ததால் மேலும் பல குழந்தைகள் உட்படப் பலர் காயமின்றித் தப்பிப்பிழைத்துள்ளனர்.

பூங்காவுக்கு விளையாட வந்திருந்த மூன்று வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேரே கடுமையான கத்திவெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் குழந்தைகள் நால்வரும் வயோதிபர் ஒருவரும் உயிராபத்தான நிலையில் உள்ளனர்.

கத்திவெட்டுக்கு இலக்கான குழந்தைகளில் ஒரு குழந்தை பிரிட்டிஷ் பிரஜை என்பதை லண்டனில் அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மற்றொரு குழந்தை நெதர்லாந்தைச் சேர்ந்த பெற்றோரது குழந்தை ஆகும்.

தாக்குதலாளியிடம் இருந்து தப்புவதற்காக பலரும் அங்கும் இங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் பொலீஸார் தலையிட்டுத் தாக்குதலாளியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதையும் நேரில் கண்டவர்கள் வீடியோ படமாக்கியுள்ளனர்.

உலகெங்கும் இருந்து பலரும் உல்லாசப் பயணம் வருகின்ற அல்ப்ஸ் மலைப் பகுதியில்-சுவிற்சர்லாந்து எல்லையோரம் அன்னேசியில் (Annecy) அமைந்துள்ள பிரபல ஐரோப்பா பூங்காவில் (Jardin d’Europe) இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.

நாட்டுக்குள் குடியேறிகள் மற்றும் அகதிகள் படையெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கடுமையாக்குவது தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகின்ற வேளையில் இடம்பெற்றிருக்கின்ற – வெளிநாட்டு அகதி ஒருவர் சம்பந்தப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம் – அரசியல் தரப்புகளினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுவருகிறது.

“கோழைத்தனமான ஒரு தாக்குதல்” இது என்று அதிபர் மக்ரோன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பாரிஸில் இருந்து பிரதமர் எலிசபெத் போர்ன், உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா ஆகிய இருவரும் உடனடியாகவே அன்னேசி(Annecy) நகருக்கு விரைந்து சென்றிருக்கின்றனர்.

கறுப்புக் கண்ணாடி அணிந்த நபர் கூரான கத்தி ஒன்றினால் பலரை வெட்டுவதையும் குழந்தைகளது அலறல் சத்தங்களையும் உள்ளடக்கிய காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன

தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சி. பூங்காச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் எடுத்த படம்.

நன்றி :BFM தொலைக்காட்சி

????தாக்குதலாளி யார்?

தாக்குதலாளியின் பெயர் அப்துல்மாசி (Abdalmasih). 1991 இல் சிரியாவில் பிறந்தவர். அங்கிருந்து வெளியேறி சுவீடன் நாட்டில் அகதி உரிமை பெற்று வசித்தவர். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையான அவர் அங்கிருந்து பிரான்ஸின் எல்லைக்குள் வந்து தங்கி இங்கேயும் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது புகலிட விண்ணப்பத்தைப் பிரான்ஸின் அகதிகள் மற்றும் நாடற்றவர்களைப் பாதுகாக்கின்ற அலுவலகத்தில்  (l’Ofpra)சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அகதிகள் உரிமை பெறுவதற்காகக் காத்திருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு வன்முறையில் இறங்கிக் குழந்தைகளை வெட்டிக் காயப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களாக அவர் அந்தப் பூங்கா பகுதியில் நடமாடித் திரிந்ததைக் கண்டதாக சாட்சிகள் கூறியிருக்கின்றனர். அவர் இன்று காலையிலும் அங்குவந்து அமர்ந்திருந்தவாறு குழந்தைகள் விளையாடுவதை அவதானித்துக் கொண்டிருந்துள்ளார் என்பதை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கத்தியால் வெட்டித் தாக்கிய போது தான் ஒரு “சிரியக் கிறிஸ்தவன்” என்று சத்தமிட்டார் எனக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கான அவரது நோக்கம் என்ன என்பது தெரியவரவில்லை. பாதுகாப்புப் பிரிவினரால் இதற்கு முன்னர் குற்றச் செயல்களுக்காக அறியப்பட்ட ஒருவர் அல்லர் என்றும் தாக்குதலாளியிடம் பயங்கரவாதச் செயல் புரியும் எண்ணம் இருந்துள்ளதா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை எனவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">