தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை  இலங்கை அரசு வழங்காது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிப்பு.

தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசாங்கம் முன்வராது. எனவே ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்று கொள்ள முடியும் என்பதை தான் கைது செய்யப்பட்ட சம்பவம் எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி  காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, கொழும்பில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக வெளிநாட்டு பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.பிணையில் விடுதலையாகி வந்த பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு காவல்துறை என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு  காவல்துறையினரிடம் இருப்பதனால்  காவல்துறையினரின் விசாரணைகளை பக்க சார்பாக முன்னெடுத்து தங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இனவன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த காவல்துறையினரும் உள்ளடங்குகின்றனர்.

ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசாங்கம் முன்வராது.எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.