கனடா காட்டுத் தீயால் நியூயோர்க் நகர் மீது வளி மாசு மண்டலம்


Kumarathasan Karthigesu-பாரிஸ்

பல லட்சம் மக்களுக்கு பெரும் சுவாசப் பாதிப்பு மாஸ்க் அணிய அறிவுறுத்து

கனடாவின் கியூபெக் பிராந்தியத்தில் இருந்து வருகின்ற காட்டுத் தீ மாசுகள் அமெரிக்காவின் வட பகுதி நகரங்கள் மீது கவிந்து பெரும் சுற்றுச் சூழல்ப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

நியூயோர்க், வோஷிங்டன் நகரங்களின் வான் பரப்புகளைத் தீப்புகை மூடிப் பரந்துகாணப்படுகிறது. சுவாசக் காற்றின் தரம் மிகவும் அசுத்தமடைந்து காணப்படுவதால் வீடுகளில் தங்கியிருக்குமாறும், மாஸ்க் அணிந்து வெளியே நடமாடுமாறும் நகர மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றின் வேகத்தைப் பொறுத்து அடுத்து வரும் ஒன்று அல்லது இரண்டு கிழமை களுக்கு வளி மாசடைதல் நீடிக்கும் என்று அமெரிக்காவின் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

ரொறேன்ரோ உட்பட கனேடிய நகரங்களிலும் மக்கள் புகைக் காற்றைச் சுவாசித்து வருகின்றனர். சுவாச நோய்களில் இருந்து தப்பிக்க என் 95 (N95 masks) வகையைச் சேர்ந்த மாஸ்க்கை அணியுமாறு வட அமெரிக்க மக்களுக்கு மருத்துவத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. நியூயோர்க் நகர நிர்வாகம் மக்களுக்கு பல லட்சம் மாஸ்க்குகளை இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.”இது ஒரு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு தான்.கொரோனா போன்றது அல்ல. சில நாட்களுக்கு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் “என்று நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நகரங்களின் வான்பரப்புகள் தெளிவாகப் பார்க்க முடியாதவாறு புகை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளன. தாங்கள் கண் எரிவு மற்றும் மூச்சு சிரமம் போன்ற சங்கடங்களைச் சந்தித்தனர் என்று நியூயோர்கில் தங்கியிருக்கின்ற வெளி நாட்டு உல்லாசப் பயணிகள் சிலர் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால் உலகின் பல இடங்களிலும் ஒரு பருவ கால அழிவு போன்று மாறி மாறிக் காட்டுத் தீக்கள் பரவி வருகிறன. கியூபெக் மாநிலத்தின் பல பகுதிகளில் மூண்ட காட்டுத்தீ இம் முறை மிக மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தி மூசி எரிந்துகொண்டிருக்கின்றது.