கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உரையில் கடும் அதிருப்தியினை வெளியிட்டார் சாணக்கியன்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் இன்று வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் சிறப்புரிமை தொடர்பில் தனிப்பட்ட பிரேரணையொன்றை இன்று சமர்ப்பிக்கவிருந்த நிலையில் அவரை பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது பாராளுமன்ற உரையில் கடும் அதிருப்தியினை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையை கொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டிய இராசமாணிக்கம் சாணக்கியன் இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமாக விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர், பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கிய நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.வடக்கு – கிழக்கில் தமது அடையாளத்தை மறைத்து சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு திடீரென நுழையும் மோசமான நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.இவ்வாறான ஒரு நிலையில் நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எம்மில் உண்டு. அத்துடன், இன்று கஜேந்திரகுமாருக்கு நடைபெற்ற இந்த சம்பவம் நாளை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.