இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம்!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்களுக்கு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2022 நவம்பரில் இலங்கை தமது முதல் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்களை உறுதிப்படுத்தியது.