தெற்கு உக்ரைனில் நீர்த்தேக்க அணை தாக்கி உடைப்பு! வெள்ள அபாயம்!!
மக்களை வெளியேற்ற பெருமெடுப்பில் பணி
உக்ரைனின் தெற்கில் ஹெர்சன் (Kherson) பிராந்தியத்தில் அமைந்துள்ள நோவா ககோவ்கா அணை (Nova Kakhovka dam) தகர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் நீர்த்தேக்கத்தை அடுத்துள்ள சுமார் எண்பது குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் பாதிக்கும் அபாய நிலைமை தோன்றியுள்ளது. நோவா ககோவ்கா (Nova Kakhovka) நகரம் நீரில் மூழ்கி வருகிறது. அங்கு 11 மீற்றர்கள் உயரத்துக்கு நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் முக்கிய நீர் மின்நிலைய அணைகளில் ரஷ்யப்படைகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியுள்ள ஒரேயொரு அணை இந்த நோவா ககோவ்கா அணை ஆகும்.
நீண்ட நிப்ரோ நதி (Dnipro River) உக்ரைனின் தென் பகுதியில் ரஷ்யா வினதும் உக்ரைன் படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இரண்டாகப் பிரிகிறது. அந்த நதி மீது நோவா ககோவ்கா பகுதியிலேயே நீர் மின் அணை அமைந்துள்ளது. கடந்த 16 மாதகாலமாக நீடித்துவருகின்ற போரில் இந்த அணைக் கட்டு ஒரு முக்கிய இலக்காக இருந்து வருகிறது. வடக்கே பெலாரஸ் எல்லையில் தொடங்கி கீழே கருங்கடல் வரை செல்கின்ற நிப்ரோ நதி நாடு முழுவதுக்குமான குடி தண்ணீர் விநியோகத்தில் முழுப் பங்கை வகிக்கின்றது. ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிறீமியா குடாவுக்கும் இந்த நதியில் இருந்தே குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
ரஷ்யப் படைகளே அணைக்கட்டைத் தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது. அதிபர் ஷெலென்ஸ்கி பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டம் ஒன்றைக் கூட்டி நிலைமையை விவாதித்திருக்கிறார்.வெள்ளம் பாயும் பகுதிகளில் இருந்து பொதுமக்களைப்பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் பெருமெடுப்பில் இடம்பெற்று வருகின்றன.
அணைக்கட்டு அமைந்துள்ள ஆற்றுக்கு இரு புறமும் இரண்டு தரப்புகளினதும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் முன்னரங்குகள் அமைந்துள்ளன. எனினும் ரஷ்யப்படைகளே அணைக் கட்டுப் பகுதியை அணுகும் நிலையில் நெருக்கமாக நிலைகொண்டுள்ளன.
ரஷ்யாவே அணைக் கட்டை வெடி குண்டு பொருத்தித் தகர்த்துள்ளது என்று உக்ரைன் அரசு கூறியுள்ளது. உக்ரைன் படைகளது ஷெல் தாக்குதலினாலேயேஅணைக் கட்டு சேதமடைந்தது என்று மொஸ்கோவில் அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிழக்கின் பகுதிகள் மீது உக்ரைன் படைகள் பெருமெடுப்பிலான தாக்குதலைத் தொடக்கியுள்ளன என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையிலேயே தெற்குப் பகுதியில் திடீரென அணைக்கட்டுத் தகர்க்கப்பட்டிருக்கிறது. போர் முனைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே ரஷ்யா அணையைத் தகர்த்து நாச வேலை புரிந்துள்ளது என்று உக்ரைன் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவ இலக்காகக் கொள்ளப்பட முடியாத – ஒரு சிவில் உட்கட்டமைப்புமீதான இந்தத் தாக்குதலைப் “போர்க் குற்றம்”என்றும் சுற்றுச் சூழல், பல்லுயிர் கட்டமைப்பு மீதான தாக்குதல் எனவும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.