ஸ்வீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்தி போலியானது.
ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது.
ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.
அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார்.
எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு அந்நாட்டு விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.