நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்: சாக்ஷி மாலிக் ட்வீட்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பலர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர்.

இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. இந்த பஜ்ரங் புனியா சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்த சந்திப்பையடுத்து, சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டார் என்றும், போராட்டத்தை கைவிட்ட அவர் மீண்டும் தனது ரயில்வே பணியில் இணைந்தார் என்றும் செய்திகள் வெளியான நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போராட்டத்தை கைவிடவில்லை. நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவலை பரப்ப வேண்டாம். நீதிக்கான போராட்டத்திலிருந்து யாரும் பின் வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம்’ என ட்வீட் செய்துள்ளார்.