தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல்: தெரியாது -ஜனாதிபதி.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் நேற்றுமுன்தினம் மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் தாக்கியதுடன், பொலிஸ் உடையிலிருந்த ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் நேற்று மாலை கேள்வி எழுப்பியபோதே அவர்கள் மூவரும் தமக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.

இதேவேளை  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.அங்கு எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தாக்குதலோ இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.