உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு  மூன்று மாதங்களுக்குள் இறுதி: அலி சப்ரி தெரிவிப்பு.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதில் அதிகளவான சிரத்தையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர் ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவை தயாரிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுவதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பாக பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி அனைவரின் கருத்துகளையும் உள்ளீர்க்கவுள்ளதாகவும் தொடர்ந்து பூரணமான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் செயல்பாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும்  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.