யாழ்ப்பாண மாவட்டத்தில்  மாணவர்களின் பாடசாலை இடைவிலகல்  எண்ணிக்கை அதிகரிப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர்.இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,  இடைவிலகலை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. இந்த விடயத்தை மானசீகமாகச் செய்யவேண்டும். பாடசாலை இடைவிலகல் ஊடாக எமது இளம் சமுதாயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றது என்றார்.