ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தையிட்டி விகாரை தொடர்பான விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்தனர்.

அதன் போது, விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் அதனைச் செவிமடுத்தாரே தவிர தீர்வை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.

கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது. அந்த மக்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டவிரோத கட்டடத்தை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.இந்த விகாரைக்கான அடிக்கல் நடப்பட்ட மறுநாள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை நிறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே தீர்மானம் பின்னர் யாழ். மாவட்டச் செயலகத்திலும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரினர். யாழ். மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தைகயதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்தே அவ்வாறானதொரு தீர்மானத்தை மீள நிறைவேற்றமுடியும். இப்போது, அந்த விகாரைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கருத்தை பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.