சொமாலியா பெருவெள்ளத்தில் 4 இலட்சம் பேர் பாதிப்பு : யுனிசெஃப்
சொமாலியா நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக 4,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அந்நாட்டைச் சுற்றியுள்ள பிற நாடுகளும் மற்றொரு மனித பேரழிவினைச் சந்திக்குப்போகும் பேராபத்தில் உள்ளன என்றும் அறிக்கையொன்றில் கூறியுள்ளார் சொமாலியாவிற்கான யுனிசெஃப் பிரதிநிதி Wafaa Saeed
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சொமாலியாவில் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது வறட்சி ஏற்படுத்தும் பேரழிவின் தாக்கத்தைப் பற்றி கலந்துரையாடல் நிகழ்த்தியதாகவும், அந்நாடு தொடர்ந்து ஐந்து பருவங்களை மழையின்றி கடந்து அதன் ஆறாவது நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார் Saeed .
தற்போதைய சூழலில் சொமாலியா மற்றும் எத்தியோப்பியன் மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்தால், திடீர் வெள்ளம் ஏற்பட்டு 16, இலட்சம் மக்களைப் பாதிக்கும் என்று மனிதாபிமான நடவடிக்கையாளர்கள் கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் Saeed.
இப்பெருமழை வெள்ளம் காரணமாக, ஏறத்தாழ 12 கிராமங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இப்பகுதிகளைப் படகு மூலம் மட்டுமே சென்றடைய முடியும் என்றும் தெரிவித்துள்ள Saeed அவர்கள், உள்ளூர் அரசும், யுனிசெஃப் உட்பட பிற அமைப்புகளும் ஏற்கனவே உதவிகளை வழங்கி வருகின்றன என்றாலும், தேவையின் அளவு மிக அதிகமாக உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஜூன் மாதத்தை நெருங்கும் இவ்வேளையில், சொமாலியாவிற்கான மனிதாபிமான திட்ட உதவிகளுக்கு 26 விழுக்காடு மட்டுமே நிதியளிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் தண்ணீர், உடல்நலம் மற்றும் நலவாழ்வு துறைக்கு ஏறத்தாழ 11 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார் Saeed.
இத்துயரமான வேளையில், அனைத்துலகச் சமூகம் தனது ஆதரவைத் தொடரவும், அதை அதிகரிக்கவும், வேண்டிய நேரம் இது என்று சுட்டிக்காட்டியுள்ள Saeed அவர்கள், சொமாலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற நாடுகளும் மற்றொரு மனித பேரழிவினைச் சந்திக்குப்போகும் பேராபத்தில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.