மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் ரஷ்யர்களை மிரட்டும் முயற்சி-அதிபர் புடின்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
தலைநகரங்கள் மீது வெடிக்கும் குண்டுகள்.
போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளின் தலைநகரங்கள் மீதும் ட்ரோன் யுத்தம் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்யாவின் தலை நகராகிய மொஸ்கோ மீது ஒரே சமயத்தில் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் ரஷ்யா சீற்றமடைந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடந்த மூன்று தினங்களாக இரவிலும் பகலிலும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியிருந்தது. அதற்குப் பதிலடியாகவே உக்ரைன் மொஸ்கோவைத் தாக்கியுள்ளது என்று நம்பப்படுகிறது. ஆனால் கீவ் அதனை மறுத்துள்ளது.
மொஸ்கோ மீதான தாக்குதலுக்கு உக்ரைனே பொறுப்பு என்று அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.
நகரின் வான் பாதுகாப்பு சாதனங்கள் வெற்றிகரமாக இயங்கித் தாக்குதலை முறியடித்து விட்டன என்றும் – ரஷ்யர்களைப் பயமுறுத்துவதற்கு உக்ரைன் மேற்கொள்ளும் முயற்சி இது என்றும் தாக்குதல் குறித்துக் கருத்துவெளியிடுகையில் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை காலை ஒரே சமயத்தில் எட்டு ட்ரோன் விமானங்கள் மொஸ்கோ நகரம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளன. அவற்றில் ஐந்து சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் மூன்று ட்ரோன்கள் நகரின் உயர்ந்த கட்டடங்களில் மோதியுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றால் பெரிய சேதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. எனினும் அது நகரவாசிகளைப் பதற்றமடையச் செய்துள்ளது.
ரஷ்யா கைப்பற்றி நிலைகொண்டுள்ளபகுதிகள் மீது பெரும் எடுப்பிலான எதிர்த் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு உக்ரைன் படைகள் தயாராகி வருகின்றன. எந்த வேளையிலும் தாக்குதல் தொடங்கலாம் என்பதை உக்ரைன் அரசுத் தலைமை பகிரங்கமாக உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா அதன் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகிறது. உக்ரைனின் வான் பாதுகாப்பு சாதனங்களைப் பலவீனப்படுத்துதல், சேதப்படுத்துதல் , அதேசமயம் அவற்றின் நிலைகளை அறிதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே ரஷ்யா இவ்வாறு புதிய உத்தியைப் பின்பற்றி வருகிறது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைன் படைகளது கவனத்தை முன்னரங்க நிலைகளில் இருந்து நகரங்கள் நோக்கித் திருப்புவதற்கும் ரஷ்யா முயற்சிக்கிறது. அதே உத்தியையே உக்ரைனும் பின்பற்றி மொஸ்கோ மீது தாக்குதல்களை நடத்தி அதிபர் புடினுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு அழுத்தங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
எனினும் மொஸ்கோ நகரைத் தாக்கிய ட்ரோன்கள் உக்ரைனில் இருந்துதான் எல்லை கடந்து ரஷ்யாவுக்குள் சென்றனவா அல்லது அங்கு உள்நாட்டில் இயங்குகின்ற புடின் எதிர்ப்பு ஆயுதக் குழுக்கள்தான் அத் தாக்குதலை நடத்தினவா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.