துருக்கித் தேர்தலில் எர்டோகன் வெற்றி! மேலும் ஐந்தாண்டு அதிபர் பதவியில்
துருக்கியில் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று வாக்களிப்பில் தற்போதைய அதிபர் ரெசெப் ரய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட முழு வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 52.14%வீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்த பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் கெமால் கிளிசடரோக்லு (Kemal Kiliçdaroglu) 47.86%வீதமான வாக்குகளையே பெற்றுள்ளார்.
இரண்டு தலைவர்களும் சரி பாதிக்குச் சமனான வாக்குகளைப் பெற்றிருப்பது நாடு இரண்டுபடுவதைக் காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படையிலான பழமைவாதத் தலைவர் எர்டோகனின் நீண்ட கால அதிகாரத்தை நாட்டு மக்களில் அரைப் பங்கினர் வெறுப்பதை இம்முறை தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த மே ஆறாம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்களிப்பில் இவர்கள் இருவரில் எவருமே 50 சதவீத வாக்குகளைப் பெறாத காரணத்தினால் நேற்று இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த இருபது ஆண்டுகளாக துருக்கியை ஆண்டு வருகின்ற தேசியவாதத் தலைவராகிய எர்டோகன் மீண்டும் ஒரு முறை தேர்தலில் வென்றதன் மூலம் மேலும் ஐந்தாண்டு பதவிக்காலத்துக்கு அதிகாரத்தில் நீடிக்கவுள்ளார். ஆதரவாளர்கள் தலைநகர் அங்காராவில் திரண்டு அவரது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். தனது நெருங்கிய நண்பராகிய எர்டோகனின் வெற்றிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனடியாக வாழ்த்துத் தெரிவித்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன், உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி உட்பட உலகத் தலைவர்கள் பலரும் எர்டோகனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நேட்டோவின் உறுப்பு நாடுகளில் ஒன்றாகிய துருக்கி போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடுநிலையை வகித்துவருகின்றது.ரஷ்யாவுக்குச் சாதகமான நிலைப்பாடாகவே அதனைப் பலரும் மதிப்பிடுகின்றனர். அதேசமயம் துருக்கியில் எர்டோகனின் வெற்றி சுவீடன் நாடு நேட்டோவில் இணைவதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.