39பேருடன் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய சீனக் கப்பல்: 7 சடலங்கள் மீட்பு
கடந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலில் இருந்து ஏழு சடலங்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டுள்ளனர்.
சீனப் போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி, சி.சி.டி.வி. காட்சிகளுக்கு அமைய கப்பலின் அறையில் இருந்த சடலங்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை சீன தொலைதூர நீர் மீன்பிடிக் கப்பல் “Lupeng Yuanyu 028” கவிழ்ந்ததையடுத்து, காணாமல் போன 39 பணியாளர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டன.
சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், காணாமல் போன பணியாளர்களை மீட்க முழுவீச்சில் தேடுதல் பணிக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பெங்லாய் ஜிங்லு ஃபிஷரி கோ லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிறுவனம் இன்னும் அறிக்கையை வெளியிடவில்லை.
கப்பலில் இருந்த 39 பேரில் – 17 சீனக் குழு உறுப்பினர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஐந்து பேரும் இருந்துள்ளனர்.
மேற்படி மீட்கப்பட்ட சடலங்கள் எந்தக் குழு உறுப்பினர்களது என கண்டுபிடிக்கப்படவில்லை.
சிசிடிவி காட்சிகளுக்கு அமைய சிதைந்த கப்பல் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கிறது.