தமிழர்களுக்காக வாதிடுவதைக் கனடா நிறுத்தாது!
Kumarathasan Karthigesu
முள்ளிவாய்க்கால் நினைவு செய்தியில் ஜஸ்டின் ரூடோ.
பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
ஈழத் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்பட்டதைக் குறிக்கின்ற மே மாதம் 18 ஆம் திகதியைக் கனடாவில் தமிழர் இன அழிப்பு நினைவு நாளாகக் (Tamil Genocide Remembrance Day) கடந்த ஆண்டில் அந்நாடு பிரகடனம் செய்தது. அதன் பின்னர் பிரதமர் ரூடோ அந்த நாளை ஒட்டிய தனது முதலாவது செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார்.
ஈழத் தமிழர்களது இன அழிப்பு நினைவு நாளில் நாட்டின் அரசுத் தலைவர் ஒருவரிடம் இருந்து வெளியாகின்ற முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை இதுவே ஆகும்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :
சர்வதேச தலைமைப் பாதுகாவலனாகக் கனடா விளங்கி வந்துள்ளது. அந்தப் பணி இனியும். தொடரும். மேலும் இலங்கைத் தீவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஜனவரியில் நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் தடைகளை விதித்தது.
இதேவேளை,
பொது வாக்கெடுப்பு உட்பட சர்வதேச ஜனநாயக வழிமுறைகள் ஊடாக ஈழத் தமிழர்களது உரிமையும் சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய இரு கட்சித் தீர்மான முன்மொழிவு (bipartisan resolution) ஒன்று அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) உறுப்பினர்களான டெபோரா ரோஸ்(Deborah Ross)மற்றும் பில் ஜான்சன் (Bill Johnson) ஆகிய இருவருமே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளாகிய இன்றைய தினம் இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்தனர்.
ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கைத் தீவின் அனைத்து இன மக்களும் ஜனநாயக ரீதியாகவும் சமமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை சர்வஜன வாக்கெடுப்பை உள்ளடக்கிய வழி முறைகள் ஊடாக உறுதி செய்வதன் மூலம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளும் அமைப்புகளும் அங்கு மேம்படுத்தப்படுவதை இந்த முன் மொழிவு ஊக்குவிக்கிறது – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.