கட்டுநாயக்கவில் 43 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர் கைது..

டுபாயில் இருந்து தங்கத்துடன் இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் வசிக்கும் 35 வயதான வர்த்தகரான இவர் அடிக்கடி விமானங்களில் சென்று வியாபாரம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவர் டுபாயில் இருந்து EK-650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

02 கிலோ எடையுள்ள தங்கத்தை கம்பி போன்று செய்து அவர் கொண்டு வந்த மூன்று சூட்கேஸ்களில் அது சுற்றப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த தங்கத்தின் பெறுமதி 43 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் குறித்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வர்த்தகருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.