முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பிரித்தானியப் பிரதமரிடம் இரு வேறு மகஜர்கள் சமர்ப்பிப்பு!
இலங்கையில் நடந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 நாளின் 14 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரித்தானியா வாழ்தழிழ் இளையோர்களாகிய மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, நிலக்ஐன் சிவலிங்கம், ஜனனி செல்லதுரை, சிந்துஜா ஜெயன், புகழினியன் விக்டர் விமலாசிங்கம் மற்றும் தங்கவேலாயுதம் வானுசன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல,
பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவில் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும், அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகளான திருமதி ரஞ்சனி பாலச்சந்திரன், திரு லூக்காஸ் ஜோசப் செல்வநாதன், திருமதி ரஞ்சினிதேவி ரகுநாதன், திருமதி செல்லகுமாரி லோகநாதன், திருமதி நித்தியகல்யாணி ஜெயகுமாரன், திருமதி மரியமோட்சசலாக்கினி வரதராசா ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்
பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 70000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.