ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும்-  அருட்தந்தை மா.சத்திவேல்


ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்க, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வடக்கிற்கும், கிழக்கிற்கும் இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஊவாமாகணத்தின் முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டனர் என பெருமை கொள்வோரும் உண்டு. இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆளுநர்கள் ஜனாதிபதியின் தேவையை நிறைவேற்றுவர்களை தவிர மக்கள் கோரிக்கைகளை செவிமடுப்பவர்களாகவே இருப்பார்கள். செந்தில் தொண்டமான் ஊவாமாகண சபையின் அனுபவம் உள்ளவர். அவரை ஊவா மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்காதது ஏன்? வேறொரு தமிழரை கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்காததன் நோக்கம் என்ன? அதுவே ஜனாதிபதியின் நரி தந்திரம் எனதக் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவாமாகாணங்களுக்கு இது நாள் வரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாகவோ முதலமைச்சர்களாகவோ நியமிக்கப்படவில்லை.

அந்த அளவு துணிவு கட்சிகளுக்கும் கிடையாது. மலையக மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் தமிழர்களை அதிகாரத்தில் வைத்து விடக்கூடாது. இவ்வாறு நியமித்தால் மலையக பிரதேசத்தை மலையக தமிழர்களின் தேசியத்தின் அடையாளமாக அடையாளப்படுத்தி விடுவார்கள் என்று பயம். இது சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம் எனவும் தெரிவித்தார்.ஏற்கனவே அமைச்சர் பதவி ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு தொண்டமான் குடும்பத்தவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதே கட்சியை சேர்ந்த அதே தொண்டமான் குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

தற்போது அவர்களின் கட்சி முழுமையாக ஜனாதிபதியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கைக்குள் சென்று விட்டது என்று கூறலாம். இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷரின் அரவணைப்பிற்குள் வளர்ந்தவர்கள் தற்போது ரணிலின் அரவணைப்புக்குள் சென்று விட்டனர். இது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மலையகத்தை தமதாக்கும் செயற்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.