காலி மாவட்டத்தில் ‘வலி சுமந்த’ தோட்டப்புற பாடசாலை…!

ஆர்.சனத்

காலி மாவட்டத்தில், உடுகம கல்வி வலயத்திலேயே தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ளது. தல்கஸ்வல மேல்பிரிவு, கீழ்பிரிவு, மற்றும் மத்திய பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள்வரை அங்கு கல்வி பயில்கின்றனர்.
(தரம் 1 முதல் 11வரை) குறித்த தோட்டப்புற பாடசாலையில் பல வருடங்களாக வளப்பற்றாக்குறை நிலவுகின்றது. குறிப்பாக மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பதற்குகூட உரிய கதிரைகள் இல்லை. உடைந்த கதிரைகளை சீர்செய்து, அதனை மீள பயன்படுத்த வேண்டிய நிலை. அப்பகுதிகளில் உள்ள சிங்களமொழிமூல பாடசாலைகளில் ஒதுக்கப்படும் கதிரைகளை எடுத்துவந்துகூட இங்கு பயன்படுத்தப்படும் அவல நிலை நீடிக்கின்றது.
தல்கஸ்வல தோட்டத்தில் உள்ளவர்கள் பெருந்தோட்டத்துறை தொழிலையே நம்பியுள்ளனர். தேயிலை, இறப்பர் மற்றும் முள்ளு தேங்காய் தோட்டங்களில் வேலை செய்யும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்குகூட போதுமானதாக இல்லை. எனவே, பாடசாலை மேம்பாட்டுக்கு செலவிடும் அளவு அவர்களிடம் பண வசதி இல்லை.
மலையகம், மலையகம் என மார்தட்டிக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். கதிரை, மேசை , நூலகத்துக்கு தேவையான புத்தகங்களையே மாணவர்கள் கோருகின்றனர். முடிந்தவர்கள் இவர்களுக்கு உதவுவதற்கு முன்வாருங்கள்.