உக்ரைனுக்கு இங்கிலாந்தின் நீண்ட தூர குருஸ் ஏவுகணைகள்!
Kumarathasan Karthigesu
உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை (long-range missiles) வழங்குவதை இங்கிலாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தனது ஆள்புல நிலப்பரப்பை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்காக நீண்ட தூர குருஸ் ஏவுகணைகளை (Storm Shadow cruise missile) வழங்க லண்டன் முடிவு செய்தது என்ற தகவலை இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலர் பென் வொலஸ்(Ben Wallace) இன்று உறுதிப்படுத்தினார். இங்கிலாந்து – பிரான்ஸ் இரண்டு நாடுகளினதும் கூட்டுத் தயாரிப்பான குருஸ் ஏவுகணைகள் சுமார் 250 கிலோ மீற்றர்கள் தூரம் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவை ஆகும். போர் விமானங்கள் மூலம் வான் வழியாக ஏவப்படக் கூடிய இந்தவகை ஏவுகணைகள் உக்ரைன் போர்க் களத்தில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்று போரியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இந்த ஏவுகணைகள் ஏற்கனவே உக்ரைனுக்குக் கிடைத்து விட்டன. அல்லது அங்கு அனுப்பப்பட்டுள்ளன என்று லண்டனில் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் வசம் உள்ள சோவியத் காலப் போர் விமானங்கள் மூலம் இவற்றை எடுத்துச் சென்று வான் வழியாக ஏவமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
போரின் இப்போதைய கட்டத்தில் இவை போன்ற நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்காவும் ஏனைய சில நேட்டோ நாடுகளும் மறுப்புத்தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் – கீவ் அரசின் பல நாள் கோரிக்கையை ஏற்று இவ்வாறான நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குகின்ற முதலாவது மேற்குலக நாடு இங்கிலாந்து ஆகும். அமெரிக்கா கடைசியாக உக்ரைனுக்கு வழங்கிய ஹிமார்ஸ் ஏவுகணைகள் (Himars missiles) சுமார் எண்பது கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு மட்டுமே பறந்து எதிரி இலக்குகளைத் தாக்க வல்லவை.
உக்ரைன் அதன் இறைமைக்குரிய நில புல எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் தனது குருஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தலாம். ஆனால் ரஷ்யாவின் நிலப்பரப்புக்குள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்ற கடும் நிபந்தனையை லண்டன் விதித்துள்ளது. உக்ரைனின் ஆதிபத்திய எல்லை என்பது ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக் கொண்ட கிறீமியா குடாவையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு ஆகும்.
ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் நீண்ட நாள்களாகத் திட்டமிட்டு வந்த பெரும் எதிர்த் தாக்குதல் எந்த வேளையிலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் லண்டன் வழங்கியிருக்கின்ற நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யப்படைகளது முன்னரங்குகளைத் தாக்குவதற்குப் பெரும் வாய்ப்பாக இருக்கும் என்பதால் களத்தில் உக்ரைன் படைகளது கை ஓங்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை, போரில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக் கொள்கின்ற தென் ஆபிரிக்கா, மொஸ்கோவுக்கு ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது என்ற ஒரு பரபரப்பான தகவலை அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் வெளியிட்டிருக்கிறார். தென் ஆபிரிக்கத் துறை முகத்தில் வைத்து ரஷ்யாவின் கப்பல் ஒன்றில் கடந்த டிசெம்பர் மாதம் ஆயுத தளபாடங்கள் ஏற்றப்பட்டன என்று அமெரிக்கத் தூதர் உள்நாட்டு செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார்.