பாண் தயாரிப்பில் முதலிடம் வென்ற ஈழத் தமிழருக்கு பாரிஸ் மேயர் பாராட்டு.

Kumarathasan Karthigesu

உணவகத்தை கைவிட்டு வெதுப்பகம் தொடங்கிய இளைஞனின் சாதனை..

பாரிஸ் நகரின் மிகச் சிறந்த பாணைத் தயாரித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞர் தர்சன் செல்வராஜாவின் வெதுப்பகத்தில் பாண் வாங்குவதற்குப் பலரும் முண்டியடிக்கின்றனர்.

“நான் எப்போதும் வேறு கடைகளில் பாண் வாங்குவேன். இந்தச் செய்தி அறிந்த பிறகு இடத்தை மாற்றிக் கொண்டேன். இங்கே கிடைக்கின்ற பாண் மொறு மொறு என்று மிகச் சுவையாக இருக்கிறது. வாய்க்கு இதமாக இருக்கிறது – என்று பாரிஸ்வாசி ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார்.

பாரிஸ் நகரின் சிறந்த பாணைத் (la meilleure baguette de la ville de Paris) தயாரிக்கின்ற பேக்கரியாளரைத் (la boulangerie) தெரிவு செய்வதற்காகப் பாரிஸ் நகர சபையால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற போட்டியில் நகரின் 20 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள “Au levain des Pyrénées” என்ற வெதுப்பகம் முதல் இடத்தை வென்றுள்ளது. அதன் உரிமையாளரே தர்சன் செல்வராஜா. பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் அவருக்கும் அவரது வெதுப்பகத்துக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு நடுவர்கள் சபையால் மொத்தம் 175 வெதுப்பகங்களின் பாண்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் சரியான நிறை மற்றும் அளவுகளைக் கொண்டிராத 49 பாண்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டன. பொதுவாகப் பாண்கள் 50-55 சென்ரிமீற்றர் நீளம் மற்றும் 250 முதல் 270 கிராம் எடை என்பவற்றைக் கொண்டிருந்தல் வேண்டும். 126 பேக்கரிகளது பாண்கள் பிரபல சமயலாளர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவினரால் சுவைத்துப் பரீட்சிக்கப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த பாண் என்ற தரத்தை “Au levain des Pyrénées” வெதுப்பகம் வென்றது.

அதன் உரிமையாளருக்கு 4 ஆயிரம் ஈரோக்கள் பணப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் பாரிஸ் நகரசபை வழங்கவுள்ளது. அத்துடன் அவரது வெதுப்பகம் அடுத்த ஓராண்டு காலம் நாட்டின் அதிபர் மக்ரோனின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகையின் சமையலறைக்கும் பாரிஸ் நகரசபை மண்டபத்துக்கும் தினமும் பாணை விநியோகிக்கின்ற பெரும் வாய்ப்பையும் பெறுகிறது.

உப்பின் அளவு முதற் கொண்டு அதன் சுவை, தரம், பாரம்பரிய தயாரிப்பு முறை எனப் பல்வேறு அளவீடுகளில் சிறந்த பாண் தெரிவு செய்யப்பட்டது. பாணைக் கத்தியால் வெட்டும் போது அது எழுப்பும் ஒலியும் கூட கவனத்தில் கொள்ளப்பட்டது என்று நடுவர் ஒருவர் கூறுகிறார்.

தர்சன் செல்வராஜா இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்தவர். இத்தாலி உணவகம் ஒன்றில் பணியாற்றியவர். அங்கே ஏற்பட்ட ஓர் அறிமுகம் காரணமாகத் தனது உணவகத் தொழிலைக் கைவிட்டுச் சுயமாக வெதுப்பகம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்தி இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

“வெற்றிச் செய்தியை அறிந்தவுடன் அழுதுவிட்டேன்” என்று அவர் பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்றிடம் கூறியிருக்கிறார்.”நாங்கள் ஆண்டு தோறும் போட்டியில் பங்கு பற்றிவந்தோம். இந்த முறை வெற்றிக்காகக் காத்திருந்தோம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பாண் தயாரிப்புகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவை.. “-என்று அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டித் தெரிவில் அவரது பேக்கறி மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. இந்த முறை நகரசபை நடத்திய போட்டி முப்பதாவது ஆண்டுக்குரியது.

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற வெதுப்பகங்களின் விவரம் வருமாறு :

  1. Tharshan Selvarajah – « Au Levain des Pyrénées » 44 rue des Pyrénées (20e)

  2. Thierry Guyot « Boulangerie-pâtisserie Guyot » – 28 rue Monge (5e)

  3. Jocelyn Lohezic « Maison Lohezic » – 143 rue de Courcelles (17e)

  4. Benjamin Turquier « Tout Autour du Pain » – 134 rue de Turenne(3e)

  5. Florian Bleas « Aux Délices de Vaugirard » 48 rue Madame (6e)

  6. Frank Tombarel « Le Grenier de Félix » – 64 avenue Félix Faure (15e)

  7. Kilani Ounissi « Boulangerie Kilani » – 191 rue du faubourg Saint-Antoine (11e)

  8. Maxime Julien « Les Saveurs de Lévis » – 41 rue de Lévis (17e)

  9. Mohkam Karoui « Le Temps d’une Gourmandise » – 94 boulevard de Port-Royal (5e)

  10. Kouni Elayeb « Le Délice de Bagnolet » – 42 boulevard Mortier (20e)

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">