உண்மையை கண்டறிவதற்கான குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்வோம்-எம்.ஏ. சுமந்திரன்


உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேரள் விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.கடந்த 14 வருடங்களாக நீதிக்காக தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நீதியை வழங்க சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை நாட வேண்டுமென நாம் வலியுறுத்தி வருகிறோம்.சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே நியாயமானதும், பக்கசார்பற்றதுமான முடிவுகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார். எனினும்,  நீதி கோரி போராடும் மக்களிடம் சர்வதேசத்தின் பக்கம் செல்ல மாட்டோம். உள்நாட்டு நீதிமன்றங்கள் கீழ் தீர்வு வழங்குவதாக கூறி இழுத்தடிக்கும் அரசாங்கம் தற்போது நட்டஈட்டுக்காக இன்னுமொரு நாட்டின் நீதிமன்றை நாடியுள்ளது.

இது இந்த அரசாங்கத்தின் இனவாத முகத்தை வெளிப்படையாக சர்வதேசத்துக்கு காட்டியுள்ளது.எனவே, உண்மையை கண்டறிவதற்கான குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்வோம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என்று சுமந்திரன் கூறினார்.