உக்ரைனில் ஏஎப்பி செய்தியாளர் ரொக்கெற் வீச்சில் உயிரிழப்பு!
Kumarathasan Karthigesu
செஞ்சதுக்கத்தில் புடின் போர் வெற்றி நாள் உரை.
பாரிஸைத் தலைமையகமாகக் கொண்ட ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஆர்மன் சோல்டின்(Arman Soldin) உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
பிரான்ஸின் ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வருத்தத்துடன் வெளியிட்டிருக்கிறது.
32 வயதான ஆர்மன், போர்க் களத்தில் ஏஎப்பியின் வீடியோச் செய்திகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். தினமும் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற பாக்மவுட் (Bakhmout) நகருக்கு அருகே பணியில் ஈடுபட்டிருந்த சமயம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் ரொக்கெட் தாக்குதல் ஒன்றில் சிக்கினார் என்று அறிவிக்கப்படுகிறது.
ஆர்மன் உக்ரைன் போர்க் களத்தில் கொல்லப்பட்ட மூன்றாவது பிரெஞ்சு செய்தியாளர் ஆவார். பொஸ்னியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் உக்ரைனில் கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பமான நாள் முதல் அங்கு போர் முனைகளில் கடமையாற்றி வந்தார்.
இதேவேளை, ஜேர்மனியின் நாசிப் படைகளைத் தோற்கடித்த வெற்றி நாள் கொண்டாட்டங்கள் மொஸ்கோ செஞ் சதுக்கத்தில் படை அணிவகுப்புகளுடன் இன்று நடைபெற்றன. ஜேர்மனியின் சரணடைவைக் குறிக்கின்ற இரண்டாம் உலகப் போரின் நிறைவு நாள் ஐரோப்பிய நாடுகளில் நேற்று மே எட்டாம் திகதியே நினைவு கூரப்பட்டது.
ஆனாலும் ரஷ்யா உட்பட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் அது மே 9 ஆம் திகதியே கொண்டாடப்பட்டு வருகிறது. நாசி ஜேர்மனியின் சரணடைவு உடன்பாடு 1945 மே 8 ஆம் திகதி இரவு 11.01 மணிக்கே பேர்ளினில் கைச்சாத்தானது. அது ரஷ்யாவின் நேரப்படி மறுநாள் 9 ஆம் திகதி அதி காலை 01.01 மணி ஆகும். அதன் காரணமாகவே மொஸ்கோவில் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் அன்றைய நாளில் நடத்தப்பட்டுவருகின்றன.
மொஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் அச்சம் காரணமாக இன்றைய வெற்றி நாள் கொண்டாட்டங்கள் மிக அடக்கமான முறையிலேயே நடத்தப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக வான் படை விமான அணி வகுப்பு இம்முறை ரத்துச் செய்யப்பட்டது. அதிபர் விளாடிமிர் புடின் காலையில் படைவீரர்கள், டாங்கிகள், ஏவுகணைகளது அணிவகுப்புகளைப் பார்வையிட்ட பின்னர் விசேட உரையாற்றினார்.
ரஷ்யாவினுடைய பாதுகாப்பும் எதிர்காலமும் உக்ரைன் போர்க் களத்தில் போரிடும் வீரர்களது கைகளிலேயே உள்ளது – என்று அவர் அப்போது தெரிவித்தார்.”உங்களது போர் முயற்சிகளை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை” – என்று அவர் போர் வீரர்களுக்கான செய்தியில் கூறினார்.
ரஷ்யா மீது உண்மையான போரைத் தொடுத்துள்ள மேற்கு நாடுகள், நவ நாசிஸ முறைகளை உருவாக்கி இரண்டாம் உலகப் போரின் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்து வருகின்றன என்று புடின் குற்றம் சுமத்தினார். உக்ரைன் பிரச்சினைக்கு மேற்குலகின் உலகமய உயர் வர்க்கத்தின் வரையறையற்ற நோக்கங்களும் இலக்குகளும் ஆணவமுமே காரணம் எனக் கூறிய அவர், உலக நாகரீகம் முக்கியமான ஒரு திருப்பு முனையில் உள்ளது – என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய மொஸ்கோ வெற்றி நாள் கொண்டாட்டங்களில் பெலாரஸ், கசஹிஸ்தான், உஷ்பெகிஷ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ரூமேனியா நாடுகளது அரசுத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
புடினின் வாசஸ்தலமாகிய கிரெம்ளின் மாளிகை உட்பட ரஷ்யாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டுவரும் ஆட்களில்லாத விமானங்களின் தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்றைய போர் வெற்றி நாளில் உணரப்பட்டது என்று செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.
அணிவகுப்புகளில் வழமையை விடக் குறைந்த எண்ணிக்கையான படை வீரர்களும் யுத்த வாகனங்களுமே தென்பட்டன. எனினும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய ஏவுகணைகள் பல அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.