சே குவாராவை கைது செய்த பொலீவிய ஜெனரல் உயிரிழந்தார்.

Kumarathasan Karthigesu

புரட்சியாளர்களைக் கொன்றவர்களும் நினைவுகூரப்படுகிறார்கள்.

கம்யூனிஸப் புரட்சியாளர் ஏர்னெஸ்ரோ சே குவாராவை (Ernesto “Che” Guevara) முற்றுகையிட்டு அவரை உயிருடன் கைது செய்த பொலீவிய ராணுவ ஜெனரல்  ஹாரி பிராடோ சால்மொன் (Gary Prado Salmón) தனது 84 ஆவது வயதில் காலமானார். இத் தகவலை லா பாஸ்(La Paz) நகரில் அவரது புதல்வர் அறிவித்திருக்கிறார்.

1967 இல் தென் அமெரிக்க நாடான பொலீவியாவின் காடுகளில் வைத்து புரட்சியாளர் சே குவாராவை உயிருடன் பிடித்த படை அணிக்குத் தலைமை வகித்தவர் ஜெனரல் ஹாரி பிராடோ சால்மொன். அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்ட அவரது சிறப்புப் படையணியிடம் சிக்கிய சே குவாரா மறுநாள் பொலீவிய இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் எனக் கூறப்படும் படை வீரரான மரியோ டெரோன் (Mario Terán) என்பவர் கடந்த ஆண்டு உயிரிழந்திருந்தார்.

சே குவாராவையும் அவரது கெரில்லா அணியையும் அழித்து முற்றாக ஒழித்தமைக்காக ஜெனரல் ஹாரியை பொலீவிய ஆட்சியாளர்கள் அச்சமயம் நாட்டைக் காத்த தேசிய வீரராகப் (national hero) பிரகடனப்படுத்தி அறிவித்திருந்தனர்.

கியூபாவில் பிடல் காஸ்ரோவுடன் இணைந்து புரட்சியை முன்னெடுத்த சே குவாரா, 1959 இல் கியூபாப் புரட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தென் அமெரிக்கக் கண்ட நாடுகளில் கம்யூனிஸப் புரட்சியை விஸ்தரிக்கின்ற கெரில்லாப் போர் முறைகளைத் தொடக்கினார்.

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பனிப் போர் (Cold War) மிக உச்சக் கட்டத்தில் இருந்த அக்காலப் பகுதியில், கம்யூனிஸப் புரட்சி அலையும் சே குவாராவின் செல்வாக்கும் லத்தீன் அமெரிக்காவில் மேலோங்குவது கண்டு வோஷிங்டன் அச்சமடைந்தது.

அதனை ஒடுக்குவதற்காக சிஐஏ பொலீவியாவில் அச்சமயம் பதவியில் இருந்த வலதுசாரி அரசுக்கு இராணுவ ரீதியாக உதவிகளை வழங்கி சே குவாராவையும் அவர் முன்னெடுத்த புரட்சியையும் அழித்தொழித்தது.

சீஐஏயினால் பயிற்றுவிக்கப்பட்ட பொலீவியன் ரேஞ்சர்ஸ் (US-trained Bolivian Rangers) படையணிக்குத் தலைமை வகித்தவரான ஜெனரல் ஹாரி பிராடோ சால்மொன், பின்னாளில் வெடி விபத்து ஒன்றில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தார்.1988 இல் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அச்சமயத்தில் “சே குவாராவைக் கைதுசெய்தது எப்படி?” (How I Captured Che) என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார்.

அடர்ந்த காடு ஒன்றில் இராணுவ அணியின் முற்றுகைக்குள் சிக்கிப் பிடிபட்ட சே குவாரா, மறுநாள் லா ஹிகுவேரா(La Higuera) என்ற பொலீவியக் கிராமத்தில் பாடசாலை ஒன்றில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது உடல் ரகசிய இடம் ஒன்றில் புதைக்கப்பட்டது. பின்னர் 1997 இல் அவரது உடல் எச்சங்கள் எனக் கூறப்படும் பகுதிகள் சில அங்கு கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை கியூபாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதைகளுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">