ரணில் ராஜபக்சவின் நரித் தந்திரத்தை புரியாமல் தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்கக் கூடாது: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  கருத்து.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  முதலில் பாராளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  நினைவேந்தல்களை குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்கள். மேலும் நினைவேந்தல்களை கைப்பற்றவேண்டும் என பல்வேறு தரப்பு கூறும் நிலையில் தற்போது வடக்கு கிழக்கில் உள்ள பாராளுமன்றத்தில் இருக்கும் 22 ஆசனங்களையும் எந்தவொரு தமிழ்க்கட்சிகளுமே முழுமையாகக் கைப்பற்றாத நிலையே காணப்படுகின்றது.

அந்த வகையில் பாராளுமன்றத்தை முழுமையாகக் கைப்பற்றிவிட்டு நினைவேந்தல்களை கைப்பற்றுவது பற்றி சிந்திக்கலாம் என குறித்த தரப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.தமிழர் தாயகத்தில் போராளிகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்புகள் அமைதியாகக் காணப்படும் நிலையில் எங்கோ இருந்த தரப்புக்கள் தற்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கின்றன.

தியாகி திலீபனின் நினைவேந்தல், அன்னை பூபதியின் நினைவேந்தல் போன்றவற்றில் குழப்பங்கள் இடம்பெற்றிருந்தது.எனவே ரணில் ராஜபக்சவின் நரித் தந்திரத்தை புரியாமல் தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்கக் கூடாது. மாறாக ஒருமித்து நினைவேந்தல்களை மேற்கொள்ளும் தருணத்திலே எங்களுக்கான நீதி கிடைக்கப்பெறும் என்றனர்.