நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது பிரதமர் அவர்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார்.

ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது என குற்றசாட்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின், நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.