உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச விடுத்த அறிவித்தல்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய யோசனைகளைப் பொதுமக்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சகல தரப்பினரதும் யோசனைகளுக்கு அமைவாக அவசியமானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அதன்படி நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமிருந்தும் திருத்த யோசனைகள் கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே அதன் யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது. அதேவேளை முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையான வாபஸ் பெறவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்நிலையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய யோசனைகளைப் பொதுமக்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாகத் தமக்கு அனுப்பிவைக்கமுடியும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி இலக்கம் – 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தைஇ கொழும்பு – 10 என்ற முகவரியின் ஊடாக பொதுமக்கள் தமது யோசனைகளை நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.