பிரெஞ்சுக் கிண்ணம்: இறுதி ஆட்டம் காண பாரிஸ் உள்ளரங்குக்கு வருகிறார் மக்ரோன்.

Kumarathasan Karthigesu

அவரை முற்றுகையிட எதிர்ப்பாளர்கள் திட்டம்? ஆர்ப்பாட்டங்கள் தடை!

பிரெஞ்சுக் கிண்ணத்துக்கான(Coupe de France) உதைபந்தாட்டத்தின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை மாலை பாரிஸ் தேசிய உதைபந்தாட்ட உள்ளரங்கத்தில் (Stade de France) நடைபெறவுள்ளது.

நொந்த் – துளூஸ் (Nantes – Toulouse) அணிகள் மோதுகின்ற அந்த இறுதியாட்டத்தைப் பார்வையிட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரளவுள்ளனர். வழக்கம் போல அரசுத் தலைவர் மக்ரோனும் அந்த மாபெரும் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வருகிறார். அந்த சமயத்தில் அங்கு அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டுப்”பணயக்கைதி” போன்று முடக்கி வைப்பதற்குத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாரிஸ் புறநகரில், செய்ன் சென் துனியில் (Seine-Saint-Denis) அமைந்துள்ள தேசிய உதைபந்தாட்ட உள்ளரங்கப் பகுதி பொலீஸாரது முழுக் கட்டுக்காவலின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுவாக உதைபந்தாட்ட நிகழ்வுகள் பெரும் பதற்றம் நிறைந்த சூழலிலேயே நடைபெறுவது வழக்கம். அதற்கு மேலாக இந்த முறை ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பு நிகழ்வுகளும் உள்ளரங்கப் பகுதியில் இடம்பெற வாய்ப்பிருப்பதால் பலத்த பொலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன.

ரசிகர்களது குழப்பங்களுக்கு மேலதிகமாகத் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுவது சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்று தெரிவித்து, அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பால் உதைபந்தாட்ட உள்ளரங்கப் பகுதியில்  நடத்த ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பட்டத்துக்கும் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தடை விதித்துள்ளது.

ஓய்வூதிய வயது அதிகரிப்புச் சட்டம் காரணமாக நாடெங்கும் அதிபர் மக்ரோன் மீதான எதிர்ப்பலை கடுமையாக உள்ளது. கடந்த வாரங்களில் அவர் நாட்டின் சில பகுதிகளில் விஜயம் மேற்கொண்ட சமயத்தில் அவர் சென்ற இடங்களில் எல்லாம் சட்டி, பானை சமையல் பாத்திர ஒலி எழுப்பும் கூட்டத்தினர் அவரை இடையூறு செய்தனர். மக்ரோன் வருகை தந்த சில இடங்களில் ஒலி எழுப்பும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதிபர் அங்கு சில ஆர்ப்பாட்டக்காரர்களது கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார்.

இதேவேளை, மே நாளான திங்களன்று தெருக்களில் பேரலையாகத் திரளுமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அரசு எதிர்ப்பு உணர்வும், பழிவாங்கும் உணர்வலைகளும் இந்தமுறை மே நாள் பேரணிகளில் மேலோங்கலாம் என்று நாட்டின் உள்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.