வாகனம் ஓட்டும் வயோதிபர்களுக்கு மருத்துவ சோதனை கட்டாயமா?

Kumarathasan Karthigesu

விபத்தை அடுத்து மீண்டும் இந்த விவகாரம் விவாதிப்பு.

பிரான்ஸில் வளர்ந்தோர் வாகனம் ஓட்டுவதற்கு வயதெல்லை கிடையாது. வாகனம் செலுத்துவதற்கான உரிமம் (Le permis B) ஒருவரது ஆயுள் காலம் முழுவதுக்குமே வழங்கப்படுகிறது.

ஆயினும் வயதான சாரதிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் நிகழும் போது மட்டும் வயோதிபர்களது உரிமம் தொடர்பான விவாதங்கள் எழுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு Berck(Pas-de-Calais) என்ற இடத்தில் புதிய கார் ஒன்றைச் செலுத்தி வந்த மாற்றுத்திறனாளியான 76 வயது வயோதிபர் ஒருவர், வீதிக் கடவை ஒன்றில் வைத்துப் பாதசாரிகள் மீது காரைச் செலுத்தியதில் 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் நால்வர் உயிராபத்தான நிலைமையில் உள்ளனர்.

இந்த அனர்த்தச் சம்பவம் வயோதிப கால சாரத்தியம் தொடர்பான சட்டங்கள் மீது நாட்டின் கவனத்தைத் திருப்பி உள்ளது. வயதானவர்கள் வாகனம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்துச் சாரதிகளுக்கும் கிரமமான  மருத்துவப்பரிசோதனைகளைக் கட்டாயமாக்குகின்ற சட்ட யோசனை ஒன்று கடந்த 2018 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் செனற் சபை அப்போதுஅதனை நிராகரித்துவிட்டது. வாகன அனுமதிப் பத்திரம் வைத்துள்ள முதியவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம் என்ற கோரிக்கை இப்போது பலராலும் வலியுறுத்தப்படுகிறது.

பிரான்ஸின் தெருப் போக்குவரத்துச்சட்டங்கள்(Le Code de la route) வயதான சாரதிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளைக் கட்டாயமாக்கவில்லை. நிலைமைக்கு ஏற்ப எவருக்காவது தேவைப்பட்டால் மருத்துவரை அணுகிச் சோதனை செய்யுமாறு கோரப்படலாம்.

அயல் நாடுகளான நெதர்லாந்தில் 75 வயதுக்கு மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரகாரர்களுக்கு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு தடவை பார்வை, காதுகேட்டல் உட்பட உடல்நிலைப் பரிசோதனைகள் கட்டாயமாக நடத்தப்படுகின்றன. இத்தாலியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறையும் 50முதல் 70 வயதுக்கு இடைப்பட்டோர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் தங்களைக் கட்டாய மருத்துவ சோதனை செய்வதன் மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதிப்பிப்பது அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">