பெரும்பான்மை இல்லாததால் புதிய குடியேற்றச் சட்டப் பிரேரணை தாமதம்!
Kumarathasan Karthigesu
இது பொருத்தமற்ற நேரம் என்கிறார் பிரதமர் போர்ன்
பிரேரணையை நிறைவேற்றுவதற்கான அறுதிப் பெரும்பான்மை கிட்டாது என்ற காரணத்தினாலேயே சட்ட மூலத்தைச் சமர்ப்பிப்பதை எதிர்வரும் இலையுதிர்காலப்பகுதிக்கு ஒத்திவைத்திருப்பதாகப் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்திருக்கிறார். நாடு பிளவுபட்டுள்ள தருணத்தில் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று கூறியுள்ள அவர், புதிய சட்டம் தொடர்பில் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சியுடன் (Les Republicains – LR)ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
குடியேற்றச் சட்ட மூலத்தை ஏப்ரல் – மே மாத காலப் பகுதியில் – வசந்த காலத்தில் – சபையில் சமர்ப்பிப்பது என்று அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சியின் முழுமையான ஆதரவு இன்றி அதனை நாடாளுமன்றின் இரு சபைகளிலும் நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் மக்ரோன் அரசுக்குக் கிடையாது. எனவே புதிய சட்ட மூலம் தொடர்பில் வலதுசாரிப் பழமைவாதிகளது ஆதரவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. இல்லையேல் ஓய்வூதியச் சட்டம் போன்று அதனையும் அரசமைப்பின் விசேட அதிகாரத்தின் மூலம் வாக்கெடுப்பைத் தவிர்த்துவிட்டே நிறைவேற்ற நேரிடும். ஓய்வூதியச் சட்டத்தை அவ்வாறு நாடாளுமன்ற நடைமுறைக்குப் புறம்பாக நிறைவேற்றியதால் நாட்டில் உருவாகியுள்ள பெரும் கொந்தளிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு தடவை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத இக்கட்டில் சிக்குவதற்கு அரசு விரும்பவில்லை. எனவேதான் குடியேற்றச் சட்ட மூலத்தை அரசு தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்துதல், நாட்டில் ஊழியர் படைக்குப் பற்றாக்குறை காணப்படுகின்ற பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுவோருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி அளிப்பது உட்படப் பல விதிகள் புதிய குடியேற்றச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.