12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் : கமல் வலியுறுத்தல்

தமிழக அரசின் 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: ‘தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என கமல்ஹாசன் கூறியுள்ளார்.