யாழ். நெடுந்தீவில் படுகொலை-சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர் கைது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.
பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் , 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரி, 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் லண்டனில் இருந்து வந்திருந்தவர் உட்பட ஐந்து நேற்று முன்தினம் நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் இந்த கோரச்சம்பவம் நடத்தப்பட்ட நிலையில் ஐவர் உயிரிழந்தும் 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரிடமிருந்து 40 பவுண் தங்கமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.