பாரிஸ் தெரு ஒன்றில் அதிபர் மக்ரோன் சிறு குழுவினருடன் பாடல் பாடும் வீடியோ!
Kumarathasan Karthigesu
சமூக ஊடகங்களில் பகிர்வு உறுதிப்படுத்தியது எலிஸே
அதிபர் மக்ரோன் பாரிஸ் நகரத் தெரு ஒன்றில் இரவு நேரம் சிறு குழு ஒன்றுடன் இணைந்து பிரேனியன் (pyrénéen) பாடல் ஒன்றைப் பாடுகின்ற வீடியோ சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
ஓய்வூதியச் சட்டத்தால் உருவாகியுள்ள நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் மக்ரோன் கடந்த திங்களன்று இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு உரையாற்றியிருந்தார். அவரது உரை ஒளிபரப்பாகிய பின்னர் அன்றிரவு சமூக ஊடகங்களில் வெளியாகிய வீடியோப் பதிவு ஒன்றிலேயே அவர் தெருவில் தோன்றிப் பாட்டுப்பாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பிரான்ஸின் பிரேனியன் பிரதேசத்தின் பாரம்பரியப் புகழ் மிக்க (un chant pyrénéen traditionnel) “Le Refuge” என்ற பாடலையே மக்ரோன் வேறு சிலருடன் சேர்ந்து நின்று பாடுவதை அந்த வீடியோ பதிவு செய்திருந்தது. எட்மொன்ட் டுப்ளன் (Edmond Duplan) என்பவர் பாடிய அந்தப் பிரேனியன் பாடல் பிரான்ஸில் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாகும்.
நாட்டின் அதிபர் பாட்டுப் பாடுகின்ற வீடியோவின் நம்பகத் தன்மையையும் அதிபரது தொலைக் காட்சி உரை ஒளிபரப்பாகிய தினத்தன்றே இரவு நேரம் அது பாரிஸ் நகர வீதி ஒன்றில் படமாக்கப்பட்டது என்பதையும் எலிஸே மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்ற தகவலை செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தனது பாரியாருடன் பாரிஸ் தெருவுக்கு வந்த அதிபரை எதிர்கொண்ட ஒரு குழுவினர் தங்களோடு இணைந்து பாட வருமாறு அவரை அழைத்தனர் என்றும் அதை ஏற்றுக் கொண்டே மக்ரோன் தனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான “Le Refuge” பாடலை அவர்களோடு சேர்ந்து பாடி மகிழ்ந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் பழையதும் பிரபலமானதுமான பாடல்களை ஆவணப்படுத்துகின்ற கன்ரோ(“Canto” association) என்ற அமைப்பினைச் சார்ந்தவர்களே வீதியில் பாட்டுப்பாட வருமாறு மக்ரோனை அழைத்துள்ளனர். சர்ச்சைக்குரிய அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளில் ஒருவராகிய எரிக் செமூரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களை யார் என்று அடையாளம் காணாத நிலையிலேயே அதிபர் மக்ரோன் அவர்களோடு இணைந்து பாடலைப் பாடியுள்ளார். அந்த வீடியோ பொது வெளியில் பகிரப்பட்டிருக்கிறது.
அதனால் புதிதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது. இத்தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்டிருக்கின்றன.
ஸ்பெயின் நாட்டை எல்லையாகக் கொண்ட பிரேனியன் பிரதேசத்துப் பாடலான”Le Refuge”என்ற பிரபல பாடலை மக்ரோன் இதற்கு முன்னரும் பொது இடத்தில் பாடியுள்ளார். மக்ரோனின் பாட்டியார் பிரேனியன் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ஆவார்.