பிரித்தானிய தலைநகர் லண்டனில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் சீனாவின் ரகசிய காவல் நிலையம் ஒன்று இயங்குவதாக வெளியான தகவல் குறித்து பிரித்தானிய அரசு கவலை தெரிவித்திருக்கிறது.தெற்கு லண்டனில் உள்ள க்ராய்டனில் சீன ரகசிய காவல் நிலையம் இருப்பதாகக் கூறப்படும் அறிக்கை மிகவும் கவலைக்குரியது என்றும், தனது குடிமக்களை துன்புறுத்தும் சீனாவின் எந்த முயற்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு  நிதி திரட்டும் விருந்துகளை ஏற்பாடு செய்த சீன தொழிலதிபர் லின் ருவெய்யாவ் அந்த காவல் நிலையத்துடன் தொடர்புடையவர் என வெளியான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீன காவல் நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்த அறிக்கை பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உரசல்களின் வளர்ந்து வரும் பட்டியலைச் சேர்க்கிறதுஇ இது உலக ஒழுங்கிற்கு சவால் என்று பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறியுள்ளார்.   பிரித்தானியாவின் உள்துறை துணையமைச்சர் கிறிஸ் பில்ப் , இது குறித்து சட்ட அமலாக்க சமூகம் விசாரணை நடத்தி வருவதாகவும், வெளிநாடுகளில் செயல்படும் அதிகாரச் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள சுமார் 100 சீன காவல் நிலையங்கள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் அறிந்திருப்பதாக பில்ப் கூறினார். திங்களன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சீன காவல் நிலையத்தை அமைத்ததாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.