ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக விசேட அஞ்சலி நிகழ்வு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு இன்று நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை,  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்து இன்றைய தினம் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து நேற்று மாலை ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணியும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்தோடு,  நினைவேந்தல் நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனால், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.