மக்ரோனின் உரையைக் குழப்ப சமையல் பாத்திர இசைக் கச்சேரிகள்!

Kumarathasan Karthigesu

பல நகரங்களிலும் நேற்றிரவு நடந்தன.

நேற்றிரவு அதிபர் மக்ரோனின் தொலைக்காட்சி உரை ஒளிபரப்பாகிய சமயத்தில் அவரது உரையைச் செவிமடுக்காது குழப்புகின்ற விதத்தில் ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சமையல் பாத்திரங்களில் சத்தம் எழுப்பும் இசைக் கச்சேரிகள் (des concerts de casseroles) பாரிஸ் உட்படப்பல நகரங்களில் நடந்திருக்கின்றன.

“எங்கள் குரலைச் செவிமடுக்க மறுக்கின்ற அரசுத் தலைவரது உரையை நாங்கள் கேட்கப் போவதில்லை” என்ற கோஷத்துடன் வீதிக் கச்சேரிகள் நடத்தும் அழைப்பு சமூக இணையத் தளங்களில் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இரவு எட்டு மணிக்கு உரை ஆரம்பமான சமயத்தில் ஆங்காங்கே வீதிகளில் சட்டி பாத்திரங்களுடன் கூடியோர் அவற்றைத் தட்டிப் பெரும் ஒலி எழுப்பி ஆடிப்பாடி ஆர்ப்பரித்தனர்.

நாட்டின் சுதந்திர தினமாகிய ஜூலை 14 ஆம் திகதி வரை இவ்வாறான சமையல் பாத்திர ஒலி எழுப்பும் போராட்டங்களைத் தினமும் இரவு எட்டு மணிக்கு நாடெங்கும் நடத்துமாறு தீவிர இடதுசாரித் தலைவரான ஜோன் லூக் மெலன்சோனின் La France insoumise கட்சி மக்களைக் கேட்டிருக்கிறது.

மக்ரோனின் ஓய்வூதியச் சட்டத்தை எதிர்த்துக் கடந்த சில மாதங்களாக வீதிப் பேரணிகளையும் வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டுவருவோர், அவர் தங்களது குரலை மதிக்காமல் – செவிமடுக்காமல் – சட்டத்தைத் தன் விருப்பப்படி நடைமுறைக்குக் கொண்டு வந்ததுள்ளார் எனக் கூறிப் பெரும் சீற்றமடைந்திருக்கின்றனர்.

நேற்றைய அவரது தொலைக்காட்சி உரையை ஒரு வெற்று வேட்டு என்று தொழிற்சங்கங்கள் வர்ணித்துள்ளனர்.அதற்கு எதிராக வரும் மே நாளன்று பேரலையாக – ஓயாத அலைகளாக – அணி திரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்ரோனின் நேற்றைய தொலைக்காட்சி உரையை 15.1 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">