“மக்களின் ஆத்திரம் நியாயமானது ஆனால் சீர்திருத்தம் அவசியமானது.”

Kumarathasan Karthigesu

தொலைக்காட்சி உரையில் அதிபர் மக்ரோன் ஒப்புதல் .

சீற்றம் தணித்து நாட்டை சீராக்க”100 நாள் திட்டம்” அரசு முன்னெடுக்குமாம்

எதிர்பார்ப்பை எள்ளளவும் எட்டாத ஏமாற்று உரை என எதிர்த்தரப்புகள் கண்டனம்.

ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டம் ஏற்படுத்திய கொந்தளிப்புகளுக்குப் பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அரசுத் தலைவர் மக்ரோன் – அந்தச் சட்டம் நாட்டு மக்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். ஆனாலும் அது அத்தியாவசியமானது என்று மீண்டும்  உறுதிபடத் தெரிவித்தார். அதன் மீது பிரெஞ்சு மக்கள் கொண்டுள்ள சீற்றத்தைத் தான் செவிமடுப்பதாகவும் கூறினார். ஓய்வூதியர்களது எண்ணிக்கையும் எதிர்பார்க்கப்படும் ஆயுள்காலமும் அதிகரிப்பதால் எதிர்காலத்தில் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதற்குச் சீர்திருத்தச் சட்டம் அவசியமானது என்று அவர் அதனை நியாயப்படுத்தினார்.

படிப்படியாக அதிக காலம் வேலை செய்வது உற்பத்தியைப் பெருக்கி முழு நாட்டினதும் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும். அது எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நன்மையாக அமையும்-என்றும் மக்ரோன் கூறினார்.

வேலைக் காலம் நீடிப்பு, தொழில் சூழலில் நெருக்கடிகள், விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற கோபத்தைத் தணிக்க 100 நாள் திட்டம் ஒன்றை அரசு முன்னெடுக்கும் என்று தனது உரையில் அவர் அறிவித்தார்.

நாட்டின் சுதந்திர தினமாகிய ஜூலை 14 ஆம் திகதி முதல் அந்த மக்கள் சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிற்சங்கங்களுடன் பேசுவதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன-என்றும் மக்ரோன் தெரிவித்தார்.

தொழில் சட்டம், கல்வி, சுகாதாரம், நீதித் துறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அரசின் எஞ்சிய மூன்றாண்டுத் திட்டம் பற்றியும் குறிப்பிட்டுப் பேசிய அவர், அந்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

நாட்டு மக்களில் பெரும்பாலானோரால் எதிர்க்கப்படுகின்ற ஓய்வூதியச் சீர்திருத்தத்தை கடும் எதிர்ப்பை மீறிச் சட்டமாக நிறைவேற்றியதால் மக்ரோன் அரசியலில் செவ்வாக்கிழந்து தனித்துப் போய் உள்ளார். அவரது அரசு பெரும் நெருக்கடிக்குள் ஆட்சியைக் கொண்டு நடத்துகின்ற நிலைவரம் காணப்படுகிறது. இந்த நெருக்கடிக்குள் இருந்து மீள்வதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற  எதிர்பார்ப்புச் சகல தரப்புகளிலும் காணப்படுகிறது. அதனால் அவரது நேற்றைய தொலைக்காட்சி உரைக்கு முக்கியத்துவம் இருந்தது. 15 நிமிட நேர உரையில் ஓய்வூதியச் சட்டம் அதன் அடுத்தடுத்த வழிமுறைகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதில் எடுத்துவைத்து காலை அரசு பின் வைக்காது என்பதைத் தெட்டத் தெளிவாக அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிக்கின்ற அந்தச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்று கோரித் தெருக்களில் நிற்போருக்கு அவரது உரையில் எந்தவித நிவாரணங்களும் அறிவிக்கப்படவில்லை. அதனால் தொழிலாளர் மத்தியில் சீற்ற உணர்வு மேலும் அதிகரித்துள்ளது.

நாடெங்கும் கடந்த சில மாதங்களாக சமூக, அரசியல் நெருக்கடியையும் குழப்பங்களையும் வன்முறையையும் உருவாக்கியுள்ள ஓய்வூதியச் சட்ட விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற ஆத்திர உணர்வைத் தணிப்பதற்கான அடிப்படைகள் எதனையும் அரசுத் தலைவரது உரை உள்ளடக்கியிருக்கவில்லை. அது அடிப்படைப் பிரச்சினையை விட்டுவிட்டுச் சம்மந்தமில்லாத வேறு விடயங்களை கொண்டுள்ளது.

மக்களது எதிர்பார்ப்புக்களை எள்ளளவும் திருப்திப்படுத்தவில்லை. அதிபர் யதார்த்தத்தை மறந்துவிட்டு எதையோ பேசுகிறார். அவரது உரையில் தீர்வுகள் வெற்றிடமாக உள்ளன. – இவ்வாறு எதிரணித் தலைவர்களும், தொழிற்சங்கப் பிரமுகர்களும் காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மக்ரோனின் உரை முடிவடைந்த கையோடு, பாரிஸ் நகரின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச சம்பவங்களும் வெடித்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">