இசை நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கு காலி முகத்திடலில் இனி அனுமதி இல்லை

பொதுமக்களுக்கு நிம்மதியாக காலத்தை கடத்துவதற்காக மாத்திரம் கொழும்பு – காலி முகத்திடலை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சமூக பொறுப்பு திட்டமாக, காலி முகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

இதற்காக துறைமுக அதிகார சபையினால் 220 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.காலி முகத்திடலில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களினால் ஏற்பட்ட சேதங்களை திருத்தயமைப்பதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.இதன்படி, எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் பொதுமக்களுக்கு நிம்மதியாக காலத்தை கடத்துவதற்கு மாத்திரம் காலி முகத்திடலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விசேட சமய நிகழ்வுகளை தவிர்ந்த வேறு எந்தவொரு நடவடிக்கைகளுக்காகவும் காலி முகத்திடலை வழங்க அனுமதி வழங்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.மேலும், இசை நிகழ்ச்சிகள், போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் காலி முகத்திடலில் அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.