15ஆயிரம் ஏக்கர் காணி சீனாவுக்கு – சீனாவை எச்சரிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இலங்கைக்கு சீனா கடன் வழங்கியுள்ளது, என்பதற்காக வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சீனாவின் ஆதிக்கம் என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எனவே சீன அரசாங்கம் தமிழர் பகுதிகளுக்கு ஊடுருவுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்திடம் மீள கடனை பெற்றுகொள்வதற்கான வழிகளை சீன அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும் மாறாக அரசாங்கத்திற்கு வழங்கிய கடன்களுக்கு ஈடாக, வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் மதனை அண்டிய பகுதியில் சுமார்,  15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு என்பன சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்ச்சியாகவே வடகிழக்கிலும் சீனர்கள் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டள்ளார்.

குறிப்பாக கடலட்டை குஞ்சுகளை வளர்க்ககூடிய தொழில் நுட்பம் சீனர்களிடம் மாத்திரமே உள்ளதால், கடலட்டைப் பண்ணைகளை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு மீனவர்களை சந்திப்பதாகவும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மீனவர்களுக்கு உலர்உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருவதாகவும் இவ்வாறு வடக்கில் பல வேலைத்திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலிறுத்தியுள்ளார்.