நாடெங்கும் வன்முறை வெடிப்பு! பொலீஸ் நிலையம் எரிப்பு!!கார்கள் தீக்கிரை!!
Kumarathasan Karthigesu
அரசமைப்புச் சபை தீர்ப்பின் எதிரொலி விசேட பொலீஸ் படை ரென் நகரம் விரைவு.
ஓய்வுபெறும் வயதை 64 ஆக அதிகரிக்கின்ற சட்டத்தை நாட்டின் அரசமைப்புச் சபை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்ததை அடுத்து அதன் எதிரொலியாக நாடெங்கும் புதிதாக வன்செயல்கள் வெடித்துள்ளன.
அரசமைப்புச் சபையின் தீர்ப்பு நேற்று மாலை வெளியாகிய கையோடு பாரிஸ் நகரில் நகர நிர்வாகச் செயலகம் (Hôtel de Ville) முன்பாகத் திரண்ட சுமார் நாலாயிரம் பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். குப்பைக் கொள்கலன்கள் மற்றும் வீதியோர இருக்கைகளுக்குத் தீ மூட்டினர். அதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
நாட்டின் வடமேற்கில் ரென் நகரில் (Rennes) சுமார் 15 ஆயிரம் பேர் திரண்டு அரசு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் நடுவே வன்முறைக் கும்பல்கள் அங்குள்ள பொலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அதன் வாயிலுக்குத் தீ வைத்தனர். அதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலீஸார் மற்றும் ஜொந்தாமினர் ஆர்ப்பார்ட்டக் காரர்களை விரட்டக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். அங்குள்ள பொதுத் தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் (Mercedes) மற்றும் டெஸ்லா (Tesla) ரகக் கார்கள் இரண்டை வன்முறைக் கும்பல்கள் தீ வைத்து எரித்தனர்.
வன்செயல்களை அடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக CRS 8 என்று அழைக்கப்படுகின்ற சிறப்புப் பொலீஸ் படை அணி ரென்(Rennes) நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நகரப் புற வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்த விசேட பொலீஸ் பிரிவு அண்மையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அடுத்து மார்செய் நகரத்திலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
லியோன், துளூஸ், மார்செய் போன்ற பெரிய நகரங்களிலும் வீதி மறிப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இதேவேளை – அரசமைப்புச் சபையின் தீர்ப்பை ஆதரித்தும் கடுமையாக விமர்சித்தும் அரசியல் மட்டங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தீர்ப்பினால் எவருக்கும்”வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை” என்று பிரதமர் எலிசபெத் போர்ன் கூறியிருக்கிறார். இதனை ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு என்றும் “ஜனநாயகக் கொள்ளை” என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் வர்ணித்துள்ளனர்.
அதிபர் மக்ரோன் தொழிற்சங்கங்களையும் தொழில் வழங்குநர்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற அமைப்புகளையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நேரடிச் சந்திப்புக்காக எலிஸே மாளிகைக்கு அழைத்துள்ளார். அரசமைப்புச் சபையின் தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலையில் அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். அதன் பின்னர் தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வெளியாகி இருப்பதால் தொழிற் சங்கங்களது கூட்டமைப்பு அதிபரது அழைப்பை நிராகரித்து விட்டுப் போராட்டங்களைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.
மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக எதிர்வரும் உழைப்பாளர் தினமாகிய மே முதலாம் திகதி பெரும் எடுப்பில் – ஓயாத அலைகளாக – வீதிக்கு இறங்குமாறு பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
நாட்டின் அரசமைப்புச் சபையின் தீர்மானம் அதிபர் மக்ரோனுக்கு கிடைத்த வெற்றியாகக் கொள்ளப்பட்டாலும் 45 வயதான அவரது தனிப்பட்ட செல்வாக்கை அதற்கு விலையாகச் செலுத்த நேர்ந்துள்ளது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டு மக்கள் மத்தியில் அரசுத் தலைவரது செல்வாக்குப் பெரும் வீழ்ச்சி கண்டுள்ள அதேசமயம் தீவிர வலதுசாரித் தலைவி மரின் லூ பென் அம்மையாரின் செல்வாக்கு மிக உச்ச நிலையை எட்டியுள்ளது என்பதைக் கணிப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.