ஓய்வூதியச் சட்டம்: 64 வயது உட்பட முக்கிய பிரிவுகளை அரசமைப்புச் சபை அங்கீகரித்தது!
Kumarathasan Karthigesu
பாதுகாப்புக்கு மத்தியில் ஒன்பது பேர் குழு தீர்ப்பு ,எதிர்ப்பு நடவடிக்கை வலுப்பெறும் ஆபத்து
பிரான்ஸின் அரசமைப்பு அதிகார சபை (le Conseil constitutionnel) மக்ரோன் அரசின் சர்ச்சைக்குரிய ஓய்வூதியச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளை ஏற்று உறுதிசெய்திருக்கிறது. சட்டத்தின் மீது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அது நிராகரித்திருக்கிறது.
இடதுசாரி எதிர்க் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட 64 வயது அதிகரிப்பை அரசமைப்புச் சபை ஏற்றிருப்பது நாடெங்கும் பலத்த அதிருப்தி உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. வீதி மறிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடையக் கூடிய ஏதுநிலை தோன்றியுள்ளது.
ஓய்வூதிய வயதை தற்போதைய 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பது உட்படப் பல திருத்தங்களைச் செய்கின்ற அந்தச் சட்டமூலத்தை எலிசபெத் போர்ன் அரசு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடாமல் அரசமைப்பின் சிறப்பு விதி ஒன்றைப் பயன்படுத்திச் சட்டமாக நிறைவேற்றியிருந்தது.அதற்கு எதிராக வெடித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் அரசியல் – சமூக நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அவை சார்ந்த வன்செயல்களும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையிலேயே – புதிய சட்டம் அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டதா என்பதை உறுதி செய்கின்ற இன்றைய முக்கிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
ஒன்பது பேர் கொண்ட சபையின் தீர்ப்பின் படி, ஓய்வு பெறும் வயதை 64 ஆக அதிகரிப்பது உட்பட சட்டத்தின் முக்கிய பிரிவுகளை அது உறுதி செய்துள்ளது. அதேவேளை வேறு சில சீர்திருத்தங்களைச் சபை ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்ப்பின் முழு விவரங்களும் இச் செய்தியை எழுதும் வரை உடனடியாகத் தெரியவரவில்லை.
அரசமைப்புச் சபையின் தீர்ப்பு வெளியாகுவதை ஒட்டி பாரிஸ் நகரில் அதன் பணிமனை அமைந்துள்ள பலே-ரோயால் மாளிகைப் பகுதியில் கடும் பொலீஸ் காவல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.நுழைவாயில் பகுதியில் கலகத் தடுப்புத் தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் பொது மக்கள் ஒன்றுகூடுவதைப் பொலீஸ் தலைமையகம் சனிக்கிழமை காலை வரை தடை செய்துள்ளது.
பிரான்ஸின் அரசமைப்பு அதிகார மையங்களில் ஒன்றாகிய அரசமைப்புச் சபை நாட்டில் பதவியில் உள்ள அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அரசமைப்புடன் இசைந்து செல்கின்றனவா என்பதைக் கண்காணித்து உறுதிப்படுத்துகின்ற பணியைச் செய்கின்றது. அதன் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு எதனையும் செய்ய முடியாது. அதிபர் பதவியில் இருக்கின்ற காலப் பகுதி முழுவதும் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.