அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் ஒன் லைனில் கசிந்தது எப்படி?
Kumarathasan Karthigesu
இளம் படைவீரர் கைது
“வீக்கிலீக்ஸ்”(WikiLeaks) ரகசிய ஆவணக் கசிவுக்குப் பின்னர் அதை ஒத்த ஒரு பெரும் உளவுத் தகவல் கசிவு எனச் சொல்லப்படுகின்ற இந்தச் சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனை உலுப்பியிருக்கிறது.
உக்ரைனின் வெற்றி வாய்ப்பு , அமெரிக்காவின் நேச நாடுகளுடனான உறவு, அதிபர் புடினின் உடல் நிலை, ஐ.நா. செயலர் மீதான வேவு, உக்ரைன் களத்தில் நேட்டோ படைகள் போன்றன சம்பந்தப்பட்ட பல ரகசியமான உளவுத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட – நூற்றுக்கணக்கான – உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பாக
மாசாசூசெட் மாநிலத்தின் தேசிய வான் காப்புக் காவலர் படையைச் சேர்ந்த (Massachusetts Air National Guard) 21 வயதான இளம் வீரர் ஒருவரை எப்பிஐ (FBI) கைதுசெய்திருக்கிறது. அவர் அந்தப் படைப் பிரிவின் உளவுப் பகுதியில் ஐரி நிபுணராகப்(IT specialist) பணியாற்றிவந்தவர். ஆவணங்கள் முதலில் வெளியாகிய அந்த அரட்டைக் குழுவின் (chat group) தலைவராகவும் இருந்துள்ளார்.
படம் :கைது செய்யப்பட்டுள்ள இளம் சைபர் துறை நிபுணர் ஜாக் ரெக்சேய்ரா (Jack Teixeira)
பாதுகாப்புக் கட்டமைப்புகளில் வயது மூப்பும் அனுபவத் திறமையும் வாய்ந்த பலர் இடம்பெற்றிருந்தாலும் நவீன கால சைபர் துறைப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பப் போர் முறைமைகளில்-அவை சார்ந்த புலனாய்வு வேலைகளில் – அதிகம் இள வயதினரே கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.கைது செய்யப்பட்ட விமானப்படையின் இளம் வீரரும் அத்தகையோரில் ஒருவரே ஆவார். அவர் வான்படைக் காவல் புலனாய்வுப் பிரிவில் சைபர் கட்டமைப்புத் துறைசார் நிபுணராகப் (cyber transport systems specialist) பணியாற்றியிருக்கிறார்.
ஜாக் ரெக்சேய்ரா (Jack Teixeira) என அறியப்படும் அந்த இளம் வீரர் அவரது நிபுணத்துவத் திறமைசார் பொறுப்பின் கீழ் இராணுவத் தொடர்பு வலைப் பின்னல்களையும் கேபிளிங் மையங்களையும் (military communications networks, including their cabling and hubs) அணுகக் கூடிய அதிகாரத்தைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரகசிய ஆவணங்கள் பகிரப்பட்டதன் பின்னணியில் உண்மையில் யார் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை.