குப்பை அகற்றும் பணியாளர் மீண்டும் வேலை நிறுத்தம்!

Kumarathasan Karthigesu

பாரிஸில் வியாழன் முதல் வீதிகளில் கழிவு தேங்கும்

சுமார் 15 நாள்கள் இடைவெளியின் பின்னர் பாரிஸ் நகரில் நாளை வியாழக்கிழமை முதல் வீதிகளில் மீளவும் குப்பைக் கழிவுகள் தேங்கவுள்ளன. நகர நிர்வாகத்துடன் சேர்ந்து இயங்கும் கழிவு அகற்றும் தொழிலாளர்கள் தங்கள் அடுத்த கட்டப் பணிப் புறக்கணிப்பை நாளைய தினம் ஆரம்பிக்கின்றனர்.

பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) கழிவு சுத்திகரிப்புப் பிரிவின் பாரிஸ் நகரத் தொழிலாளர்களே (la filière déchets et assainissement à Paris) தொடர்ச்சியான இந்த இரண்டாவது கட்ட வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்ற தங்களது குரலை அரசு செவிமடுக்காததை அடுத்தே தாங்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களது வேலை நிறுத்தம் காரணமாக கழிவுகளைத் தரம்பிரித்து எரித்து அழிக்கின்ற மூன்று முக்கிய தொழிற்சாலைகளது செயற்பாடுகளும் முடக்கப்படவுள்ளன.

நாடெங்கும் எட்டு தொழிற்சங்கங்கள் கூட்டாக நாளை முன்னெடுக்கவுள்ள 12 ஆவது கட்ட வேலை நிறுத்த நாளில் கழிவு அகற்றும் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடக்கவுள்ளனர்.

மக்ரோன் – போர்ன் அரசு ஓய்வூதியச் சட்டத்தை மீளப் பெறும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாளைய வேலை நிறுத்தம் மற்றும் பேரணிகளை ஒட்டி நாடெங்கும் பொலீஸ் பாதுகாப்பு வழமை போன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 11 ஆயிரத்து 500 பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படையினர் சேவையில் ஈடுபடவுள்ளனர். நாளைய போராட்டத்தின் போது பாரிஸ் நகரப் போக்கு வரத்து சேவைகள் பெரிய அளவில் தடைப்படமாட்டா என்று

நகரப் போக்குவரத்து சேவை வழங்குநரான RATP(La Régie autonome des transports parisiens) நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேசமயம், நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு இன்றியே நிறைவேற்றப் பட்டுள்ள ஓய்வூதியச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துள்ள முக்கிய தீர்ப்பை நாட்டின் அரசமைப்புக் கவுன்சில் (le Conseil constitutionnel) வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">