அரசமைப்புச் சபை அமைவிடம் அருகே ஒன்றுகூடத் தடை!

Kumarathasan Karthigesu

ஓய்வூதியச் சட்டம் மீது தீர்ப்பு நாளை அறிவிப்பு.

திருத்தங்களுடன் ஏற்பா? முற்றாக நிராகரித்துவிட்டு பொதுசன வாக்கெடுப்பா?

 

பிரான்ஸின் மூன்று மிக முக்கிய அரசமைப்பு அதிகார மையங்களில் ஒன்றாகிய அரசமைப்பு அதிகார சபையின் தீர்ப்பு இதற்கு முன்னர் எப்போதும் இந்தளவு பரபரப்பை ஏற்படுத்தியது கிடையாது. ஆனால் இந்த முறை ஓய்வூதியத் திருத்தச் சட்டம் மீது நாளை வெள்ளிக்கிழமை அது வழங்கப்போகின்ற தீர்ப்பு நாடெங்கும் தீவிரமாக எதிர்பார்க்கப் படுகிறது.

அரசமைப்புச் சபையின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிய முன்பாகவே அதன் பணிமனை அமைந்துள்ள பகுதியில் ஒன்று திரள்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அதனையடுத்து – பாரிஸ் நகரின் முதலாவது நிர்வாகப் பிரிவில் (75001)அரசமைப்புச் சபை செயற்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க ‘பலே- ரோயால்’ (Palais-Royal) பொதுக் கட்டடப் பகுதியில் மக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

படம் :அரசமைப்பு அதிகார சபையின் தலைவர் லோறோன் ஃபபியூஸ் (Laurent Fabius)

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா விடுத்த உத்தரவை அடுத்தே பாரிஸ் பொலீஸ் தலைமையகம் பலே-ரோயால் பகுதியில் ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை உத்தரவை விடுத்துள்ளது. இன்று வியாழன் மாலை 18.00 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 08.00 மணி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

 

தொழிற்சங்கங்களின் இன்றைய 12 ஆவது கட்டப் பேரணி மற்றும் வேலை நிறுத்தத்துக்குப் புறம்பாக முன்கூட்டியே அறிவிக்காத ஆர்ப்பாட்டங்களை நாளை வெள்ளிக்கிழமை நடத்துவதற்குப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒருவேளை மாணவர் ஆர்ப்பாட்டங்கள் அரசமைப்புச் சபையின் தீர்ப்பு வெளியாகும் சமயத்தில் அதன் அமைவிடத்தை முற்றுகையிடும் விதமாக முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வன்முறைக் கும்பல்களும் அங்கு திரண்டு குழப்பங்களை விளைவிக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்புகளில் அஞ்சப்படுகிறது. அதன் காரணமாகவே பொலீஸ் தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பது உட்பட பல திருத்தங்களை உள்ளடக்கிய மக்ரோன் அரசின் சட்டத் திருத்தத்தை நாட்டின் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கோ, அன்றி முற்றாக நிராகரிப்பதற்கோ அல்லது பகுதி அளவில் சட்டத்தை அங்கீகரிப்பதற்கோ ஒன்பது பேர் அடங்கிய அரசமைப்புச் சபைக்கு (le Conseil constitutionnel) அதிகாரம் உள்ளது.

அரசமைப்புச் சபைக்கு தற்சமயம் முன்னாள் பிரதமர் லோறோன் ஃபபியூஸ் (Laurent Fabius) தலைமை வகிக்கிறார். அதன் ஏனைய உறுப்பினர்கள் அனைவருமே அரசியல் பின்புலம் கொண்டவர்கள் ஆவர். ஆனால் அது ஒர் அரசியல் சாராத நிறுவனமயமான அமைப்பாகும்.

நீதிமன்றங்களைப் போன்று அதன் முடிவுகள் “தீர்ப்பு” என்று குறிப்பிடப் படுவதில்லை. அவை சபையின் “கருத்து” அல்லது “அபிப்பிராயம்” என்றே பெயரிட்டு அழைக்கப் படுகின்றன. பிரான்ஸின் அதிபர் அரசமைப்புச் சபையின் தீர்ப்புக்குக்கட்டுப்பட்டவர் அல்லர். ஆனால் அதன் கருத்தை மதித்து நடப்பதே அரசமைப்புக்கு அவர் அளிக்கின்ற மரியாதையாகக் கொள்ளப்படும்.

ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை அரசமைப்புச் சபை முற்றாக நிராகரித்துவிட மாட்டாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்வது சட்டம் இயற்றும் வழி முறைகளில் சட்ட விரோதமாக நடந்து கொண்டது என்று அரசு மீது பகிரங்கமாகத் தீர்ப்பளிப்பதற்குச் சமமானது என்பதால் சட்டத்தை அப்படியே முற்றுமுழுதாக நிராகரிப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசமைப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றி அல்லது நீக்கிவிட்டு அதனை நடைமுறைப்படுத்துமாறு அது பரிந்துரைக்கலாம். அல்லது ஓய்வூதியச் சட்டம் மீது நாட்டு மக்களின் கருத்தை அறிவதற்கான

பொதுசன வாக்கெடுப்பு (public referendum) ஒன்றை நடத்துமாறு அரசமைப்புச் சபை கோரலாம்.எதிர்க் கட்சியாகிய இடதுசாரிக் கூட்டணி (left-wing NUPES alliance) உட்பட கட்சிகள் இது போன்ற ஒரு வாக்கெடுப்பை நடத்துமாறு ஏற்கனவே மக்ரோன் அரசிடம் கேட்டுள்ளன.

அரசமைப்புச் சபை ஓய்வூதியச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட தாங்கள் அதனை எதிர்த்து நடத்திவருகின்ற போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிட மாட்டாது என்று தொழிற்சங்கங்கள் உறுதிபடக் கூறியுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">