பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்து ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத சட்டமூலம் ஒன்றை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் கருத்துக் கூறும் அடிப்படை உரிமையைக் குறைக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் இணக்கம் தெரிவிக்காது.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் செயற்படும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறை, சில வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்
இந்த சட்டமூலமானது கருத்து வேறுபாடுகளின் ஒவ்வொரு செயலையும் பயங்கரவாதம் என வரையறுத்தால், அது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக அமையாது.
சட்டமூலத்தை முன்வைக்கும் நீதி அமைச்சருக்கும் மேற்படி சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் தெளிவாகின்றது.
ஆகவே இச்சட்ட மூலத்தை மறுபரிசீலனை செய்யவும், நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு செய்யவும், ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத வகையில் தயாரிக்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஒரு அரசாங்கம் ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் போது, அரசாங்கம் நிச்சயமாக சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அத்தகைய நம்பிக்கை இல்லாத நிலையில், இவ்வாறான சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.