மூன்று மாதங்களில் 534 வீதி விபத்து, 564 பேர் உயிரிழப்பு.
2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடந்த 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில், 1,345 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும் 2,446 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், கடந்த 5 நாட்களில் நடந்த 21 வீதி விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளர் என்று சுட்டிக்காட்டினார்.
நாளாந்தம் நடக்கும் வீதி விபத்துக்கள் காரணமாக 5 தொடக்கம் 10 பேர் உயிரிழப்பதாகவும் இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை என்றும் குறிப்பிட்டார்.
கவனக்குறைவு, மதுபோதை, அதிக வேகம், போக்குவரத்து விதிகளை மீறுதல், பாதசாரிகள் கவனக்குறைவாக வீதியைக் கடத்தல் போன்ற காரணங்களால் வீதி விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு அனைத்து சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.