நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்!

செ.திவாகரன்

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இன்று காலை நுவரெலியா கிறகரி வாவி கரையோரத்தில் முப்படையினரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடனும் , நுவரெலியா கல்வி வலயத்திற் குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் கலை, கலாச்சார நிகழ்வுகளுடனும் கோலாகாலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள் நீடிக்கும் .

நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவா போதிமான தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண செயலாளர் காமினி இராஜரத்தின , நுவரெலியா மாநகர சபை முன்னால் முதல்வர் சந்தனலால் கருணாரட்ன , நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நோய்க்காரணமாகவும், பொருளாதார நெருக்கடி , எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி மந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இம்முறை ஏப்ரல் வசந்தக்கால தற்காலிக கடைகள் கிறகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களைவிட இவ்வருடம் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என வசந்தகால ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.