கடும் வரட்சி வருகிறது தண்ணீர் பாவனைக்கு தேசியத் திட்டத்தை அறிவித்தார் மக்ரோன்.
பருவநிலை மாற்றத்தால் நாட்டில் 40 வீத நீர் இழப்பு.
நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வரட்சியைச் சந்திக்கும் ஆபத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் அதிபர் மக்ரோன் தனது அரசின் தேசிய தண்ணீர் முகாமைத்துவத் திட்டத்தைநேற்று வெளியிட்டிருக்கிறார்.
திட்டத்தை அறிவிப்பதற்காக அல்ப்ஸ் மலைப் பகுதிக்கு(Hautes-Alpes) விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு Savines-le-Lac என்ற இடத்தில் வரண்டு போகும் ஆபத்தில் உள்ள ஒரு நதியோர நகரத்தில் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் தண்ணீர் முகாமைத்துவத் திட்டத்தின் விவரங்களை அறிவித்தார்.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வெப்ப நிலை அதிகரிப்பினாலும் மழைவீழ்ச்சி குறைந்ததாலும் நாட்டின் ஒரு டசினுக்கு மேற்பட்ட மாவட்டங்கள் வரவிருக்கும் கோடை காலத்தில் கடும் வரட்சியைச் சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை குளிர் காலப் பகுதியில் போதியளவு மழை பெய்யவில்லை. சில மாவட்டங்களில் ஒரு துளியும் மழை பெய்யாத 32 நாட்கள் பதிவாகியுள்ளன. நதிகளில் நீர் மட்டம் அருகிக் காணப்படுகிறது. விவசாய நடவடிக்கைகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு தோன்றியுள்ளது.
பனிச் சறுக்கல் விளையாட்டுக்குப் பெயர் பெற்ற பனிமலைப் பிரதேசங்கள் உருகி வரண்டுவிட்டன.அதிகரித்து வருகின்ற பூமி வெப்பம் ஐரோப்பாவின மிகப் பெரிய விவசாய நாடாகத் திகழும் பிரான்ஸில் அடுத்துவரும் தசாப்தங்களில் நிலத்தடி நீர் வளத்தில் 10 முதல் 40 சதவீதத்தை இழக்கச் செய்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே உடனடியாகவும் நீண்ட கால நோக்கிலும் தண்ணீர் வளத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் 50 அம்சங்கள் அடங்கிய தேசிய திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது.
மக்ரோனின் திட்டத்தின் கீழ் பழைய நீர் வழங்கல் குழாய்களில் கசிவுகளைத் தடுப்பதற்காக நாடெங்கும் நீர் விநியோகக் கட்டமைப்பை நவீன மயப்படுத்துதல் -மிக அதிக அளவில் நீரைப் பயன்படுத்துகின்ற தொழில் துறைகளுக்குக் கட்டண அதிகரிப்பு முறை ஒன்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துதல்- தற்சமயம் ஒரு வீதமாக உள்ள பாவித்த நீரின் மீள் பயன்பாட்டைப் 10 வீதமாக அதிகரிக்கும் திட்டங்கள் –
நாட்டின் விவசாய முறைமைகளில் நீர்ப் பயன்பாட்டுப் பாரம்பரியங்களில் நவீன முறைகளை மேலும் அதிகரித்தல் –போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டில் ஓய்வூதியச் சட்டத்தால் உருவான பெரும் கொந்தளிப்பான நிலைவரத்துக்குப் பின்னர் பாரிஸுக்கு வெளியே தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு மக்ரோன் நேற்று பிரெஞ்சு அல்ப்ஸ் பிரதேசத்துக்குச் சென்றிருந்தார். அங்கு வைத்தே நீர் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான சிக்கன வழிமுறைகளையும், எதிர்கால நீர் முகாமைத்துவத் திட்டத்தையும் அதிபர் வெளியிட்டார்.
அல்ப்ஸ் மலை நகரில் அவரது வருகையை எதிர்பார்த்துக் கூடியிருந்தபல நூற்றுக்கணக்கான ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் “மக்ரோனே பதவி விலகு” எனக் கோஷமிட்டவாறு வழிமறிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர் எனச் செய்திகள் தெரிவித்தன.